பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பள்ளிக்கு மாணவ- மாணவிகளை அனுப்பாமல் கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்தனர்.

Update: 2023-08-15 18:50 GMT

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளிவிமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 385 நாட்களாக பல்வேறு வித தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சுதந்திர தின விழாவையொட்டி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொடியேற்று விழாவுக்கு கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகளை அனுப்பாமல் புறக்கணித்தனர். சுதந்திர தின விழாவுக்கு பள்ளி மாணவ-மாணவிகள் வராத நிலையில் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழாவை கொண்டாடினார்கள்.

கருப்பு கொடி ஏற்றினர்

விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 386-வது நாளான நேற்று ஏகனாபுரம் கிராமம் முழுவதும் தெருக்களில் கருப்பு கொடி தோரணம் கட்டி, வீடுகள் தோறும் கருப்பு கொடியை ஏற்றி வைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும் தொடர்ந்து 6 முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எந்த வித பயனும் ஏற்படவில்லை என கூறி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி புறக்கணித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் சுந்தரமூர்த்தி முன்னிலையில், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் வார்டு உறுப்பினர்களும் அரசு அதிகாரிகளும் மட்டுமே கலந்து கொண்டனர்.

கிராம மக்கள் போராட்டம் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்