பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் மீது வழக்கு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-07-08 11:03 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்று வட்டார பகுதியில் 4 ஆயிரத்து 791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இநத நிலையில் தமிழக அரசு விமான நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மச்சேந்திரநாதன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இந்த குழுவினர் நேற்று முன்தினம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்ய வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆய்வு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்ற செய்தியை கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் ஆய்வுக்குழுவினரை தடுத்து நிறுத்த போலீசாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்தில் சென்ற கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மற்றும் நாகபட்டு கிராமத்தை சேர்ந்த 20 பேர் என மொத்தம் 220 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது முன்னறிவிப்பு இன்றி கூட்டம் கூடியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டது. அனுமதி இல்லாமல் ஊர்வலமாக சென்றது என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்