தேனி கலெக்டர் அலுவலகத்தில் பூ வியாபாரி தர்ணா போராட்டம்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பூ வியாபாரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தேனி அருகே வீரபாண்டியை சேர்ந்தவர் செல்வக்குமார். பூ வியாபாரி. இவர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாசல் படி முன்பு அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறும்போது, "வீரபாண்டியில் இந்துசமய அறநிலையத்துக்கு சொந்தமான கடையில் 50 ஆண்டுக்கும் மேலாக எங்கள் குடும்பத்தினர் பூ வியாபாரம் செய்து வந்தோம்.
இந்தநிலையில் அந்த கடை வேறு ஒருவருக்கு ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவித்தேன். அந்த புகார் மீது கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்கு வருமாறு கடிதம் வந்தது. ஆனால், விசாரணைக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி முறையாக விசாரிக்காமல் அலுவலகத்தை பூட்டிச் சென்று விட்டார். இதனால், இங்கு போராட்டத்தில் ஈடுபடுகிறேன்" என்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார், செல்வக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவருக்கு அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.