நாமக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சவுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சுமதி, துணைத்தலைவர்கள் கஸ்தூரி, சரோஜா, ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வின்றி பணிபுரியும் மாநகர மற்றும் நகர சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். துணை மைய கட்டிடங்களுக்கு வாடகை பிடித்தம் செய்து கிராம சுகாதார செவிலியர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் ஏற்கனவே பிடித்தம் செய்த வாடகை தொகையை கிராம சுகாதார செவிலியர்களுக்கு திரும்ப வழங்கவும், பொது சுகாதாரத்துறை இயக்குனரால் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட 42 சுகாதார மாவட்டங்களுக்கு சமுதாய சுகாதார செவிலியர்கள் பதவிகளை ஏற்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் இணை செயலாளர்கள் தமிழரசி, லலிதா, மாரீஸ்வரி, புஷ்பலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.