விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பியபோது தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்

சிந்தாதிரிப்பேட்டையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-10-06 11:38 GMT

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரை நோக்கி படையெடுத்தனர். இதனால் சென்னையில் இன்று பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவர், விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தனது சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது சிந்தாதிரிப்பேட்டை அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். அப்போது அவரது வாகனத்தில் திடீரென புகை கிளம்பியுள்ளது. இதைக் கண்டு ஜானும், அவரது சகோதரியும் உடனடியாக வாகனத்தில் இருந்து இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து சில நொடிகளில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து இருசக்கர வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்