'தஞ்சை பெரிய கோவில் உலக அதிசய பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்' - அமைச்சர் நாசர்
தஞ்சை பெரிய கோவில் உலக அதிசய பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.;
சென்னை,
சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பொன்விழா மாநாட்டில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"உலக மாவீரர்கள் என்று எடுத்துக் கொண்டால் நாம் அலெக்சாண்டர், நெப்போலியன் ஆகியோரை சொல்கிறோம். ஆனால் நமக்கு தெரிந்த மாவீரன் ராஜேந்திர சோழன், கிழக்காசிய நாடுகள் முழுவதையும் கைப்பற்றினார். அவரிடம் 5 லட்சம் துருப்புகள் இருந்திருக்கிறார்கள். சுமார் 1 லட்சம் குதிரைகள் கொண்ட குதிரைப்படை இருந்துள்ளது.
அவர் மட்டும் கிழக்காசிய நாடுகளுக்கு பதிலாக மேற்கு நாடுகளை கைப்பற்ற போயிருந்தால், அன்றைய சூழலில் இந்துஸ்தானாக இருந்த நமது இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான் என அத்தனை தான்களையும் தன்வசம் கொண்டு வந்திருப்பார். ஆனால் அவர் கிழக்கு பக்கம் சென்று கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், சீனாவின் சில பகுதிகள் என பல பகுதிகளை கைப்பற்றினார் மாவீரர் ராஜேந்திர சோழன்.
உலக அதிசயம் என்றால் நாம் தாஜ்மகாலை சொல்கிறோம். நமது தஞ்சை பெரிய கோவில் உலக அதிசய பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது இடம்பெறவில்லை. அதற்கான முயற்சியையும் நாம் எடுக்கவில்லை. அதற்கு காரணம் நமது தாழ்வு மனப்பான்மை."
இவ்வாறு அமைச்சர் நாசர் தெரிவித்தார்.