மனைவியுடன் கருத்து வேறுபாடு - குளத்தில் குதித்து பேராசிரியர் தற்கொலை

ஆரணி அருகே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குளத்தில் குதித்து பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Update: 2022-06-14 10:24 GMT

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் கோபால் தெருவை சேர்ந்த லோகநாதன் மகன் ரஞ்சித் (வயது 29). இவர் வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் தச்சூர் பகுதியை சேர்ந்த தாட்சாயணி என்ற பெண்ணை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த சில தினங்களாகவே கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப தகராறு நடந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மனைவி தாட்சாயணி கணவனிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த ரஞ்சித் அவரது மோட்டார் சைக்கிளை பையூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள பாறை குளத்தின் அருகாமையில் நிறுத்திவிட்டு அவரது செல்போன் மற்றும் அவர் கைப்பட எழுதிய கடிதத்தை மோட்டார் சைக்கிள் மீது வைத்து விட்டு குளத்தில் குதித்துள்ளார்.

இந்நிலையில் ரஞ்சித்தை பல இடங்களில் தேடிய அவரது உறவினர்கள் பையூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள குளத்தருகே அவரது மோட்டார் சைக்கிள், செல்போன் இருப்பதைக்கண்டு அங்கு சென்றனர். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கும்,போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் குளத்தில் இறங்கி ரஞ்சித்தின் உடலை மீட்டனர்.பின்னர் மீட்கப்பட்ட ரஞ்சித்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்