ஓசூரில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ஓசூர்:
ஓசூரில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
ஓசூரில், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஓசூர் ஆர்.வி. அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட மொழிகளில் அச்சிடப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர் வழங்கினர். ஊர்வலத்தில் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, ஆயத்தீர்வை துறை உதவி ஆணையர் சுகுமார், கோட்ட ஆய அலுவலர் சரவணன், தாசில்தார் சுப்பிரமணி மற்றும் துறை அலுவலர்கள், போலீசார், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சிறைத்தண்டனை
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபட, போதைப்பொருட்களை ஒழிப்போம் என்று சூளுரைத்து பொதுமக்கள், வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். போதைப்பொருட்களை கடத்துவதோ, வைத்திருப்பதோ, விற்பதோ சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்திற்கு, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் பற்றிய புகார்களை 10581 என்ற 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.