"உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" பேனர் வைத்த போலீஸ்காரருக்கு வந்த சிக்கல்

"உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" பேனர் வைத்த போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-05-21 10:23 GMT

பெரம்பலூர் :

தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வாழ்த்துக்கூறி பேனர் வைத்த பெரம்பலூர் ஆயுதப் படை தலைமைக் காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நேற்று வெளியானது.

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் வெளியான நிலையில் அவரது ரசிகர்களும் திமுகவினரும் படத்தை பிரமாண்ட பேனர்கள் மூலமும் பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டைகள் முழங்க வரவேற்றனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின் படம் வெளியாவதோடு, படத்தில் சாதிய கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு வகையான கருத்துகள் இடம் பெற்றிருப்பதால் படத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

படம் வெளியான பெரும்பாலான திரையரங்குகளை திமுக அமைச்சர்கள் முதல் காட்சியில் பங்கேற்று படத்தை பார்த்து ரசித்ததும், திமுகவினர் அனைத்து தியேட்டர்களிலும் மொத்த டிக்கெட்டுகளையும் வாங்கி கட்சிக்காரர்களை அழைத்து வந்து படம் பார்க்க வைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தலைமை காவலரான கதிரவன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாடலூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அங்கு அவர் பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியான நிலையில், " உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன், இரா. கதிரவன் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை" என உதயநிதி படத்துடனும் தனது படத்துடனும் கதிரவன் பிளக்ஸ் பேனர் வைத்து இருந்தார் .

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் அரசியல் அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு பிளக்ஸ் பேனர் வைத்து சட்டத்தை மீறிய செயல் என கடுமையாக விமர்சித்து வந்தனர். இதையடுத்து அந்த பிளக்ஸ் பேனரை அகற்ற பெரம்பலூர் காவல் துறையினர் அதனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் இது குறித்து பெரம்பலூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இளைய பெருமாள் என்பவர் கதிரவன் மீது புகார் அளித்தார்.

இதையடுத்து பொது இடத்தில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்து பொது இடத்தின் அழகை கெடுத்தது என்ற பிரிவில் காவலர் கதிரவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இரண்டு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்தும் பணியில் சேராமல் இருக்கும் கதிரவன் மருத்துவ விடுப்பில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்