கருக்கலைப்பு சரியாக செய்யாததால் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை ரூ.2¾ லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கருக்கலைப்பு சரியாக செய்யாததால் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை ரூ.2¾ லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-08-31 19:51 GMT

திருச்சி கே.சாத்தனூரை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி வள்ளிமீனாள் (வயது 30). இவர் கடந்த ஆண்டு மே மாதம் கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, கரு வளர்ச்சி இல்லாததால் கருவை கலைக்க வேண்டும் என்று டாக்டர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு அந்த மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டது. ஆனால் சில நாட்களில் அவருக்கு வயிற்றுவலி அதிகமாகி ஒரு நாள் மயங்கி விழுந்துவிட்டார்.

உடனடியாக அவரை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனா். அங்கு வள்ளிமீனாளை பரிசோதித்த டாக்டர்கள் சரியாக கருக்கலைப்பு செய்யாததால் கர்ப்பப்பை குழாயிலேயே கரு வளர்ந்து வெடித்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்தார்.

இழப்பீடு வழங்க உத்தரவு

இந்தநிலையில், தனக்கு சரியாக சிகிச்சை அளிக்காத மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மருத்துவ செலவை திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு, திருச்சி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வள்ளிமீனாள் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஜெயசிங், உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். வள்ளிமீனாள் தரப்பில் வக்கீல் சிவக்குமார் குழுவினர் ஆஜராகி வாதாடினர்.

முடிவில், பாதிக்கப்பட்ட வள்ளிமீனாளுக்கு ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 508 இழப்பீடு வழங்க வேண்டும் என்று நிரந்தர நீதிபதியும், உறுப்பினரும் உத்தரவிட்டனர். இந்த இழப்பீட்டு தொகையை அறுவை சிகிச்சை செய்த டாக்டரும், மருத்துவமனை நிர்வாகமும் பகிர்ந்து 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தற்கொலை

*திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் காவேரி நகரை சேர்ந்தவர் சுரேஷ் ஆண்டனி(43). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததுடன், அவரது மனைவி புனிதாவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், அவரை புனிதா திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சுரேஷ் ஆண்டனி வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுரேஷ் ஆண்டனி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்கள் சங்கிலியால் கைகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

*கல்லக்குடியை அடுத்த வடுகர்பேட்டை பஸ் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற கதிரேசனை(53) கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் கைது செய்தனர்.

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

*புள்ளம்பாடி ஒன்றியம், காணக்கிளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ். இவருடைய மாடு காணக்கிளியநல்லூரில் உள்ள கிணற்றில் விழுந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த புள்ளம்பாடி நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், அங்கு வந்து சுமார் 60 அடி ஆழ நீருள்ள கிணற்றில் விழுந்து கிடந்த பசுமாட்டை கயிறு போன்றவற்றின் உதவியுடன் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

*திருச்சி காஜாமலைநகர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான்(32). காவலாளி. இவரது மனைவி பாத்திமா (23). இவர்களுக்கு அசாக் என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை குழந்தையுடன் வீட்டை விட்டு சென்ற பாத்திமா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

*முசிறி பெரியார் நகரை சேர்ந்த அருள் பிரகாஷின் மனைவி லலிதா(38). இவர் சம்பவத்தன்று முசிறி தண்டலைபுத்தூர் ரோட்டில் சாலை ஓரமாக நின்ற இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்து இருந்தபோது, பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் காயமடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்