ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், வி.ஜி.பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் (வயது 22). இவர் சந்தேககவுண்டன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சல்மான் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சல்மான் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடிதம் சிக்கியது
வீட்டிக்கு வந்த சல்மானின் தந்தை, வீட்டு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சல்மான் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு கதறி அழுதார். இதுபற்றி அறிந்ததும் கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சல்மானின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரம், தான் நிறைய கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து விட்டேன். வாழ்வதற்கே அச்சமாக உள்ளது. என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.