ஊருக்குள் வராத தனியார் பஸ் சிறைபிடிப்பு

Update: 2023-07-18 20:19 GMT

ஆத்தூர்:-

ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி ஒரு தனியார் பஸ் நேற்று மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் காட்டுக்கோட்டை செல்வதற்காக ஆஜிரா பானு (வயது 45) என்ற பெண் டிக்கெட் எடுத்து ஏறினார். பஸ் காட்டுக்கோட்டை ஊருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை மேம்பாலம் மீது சென்றது. மேம்பாலத்தில் பஸ்சை நிறுத்தி அந்த பெண்ணை இறங்க சொன்னதாக கூறப்படுகிறது. இதை அறிந்த காட்டு கோட்டை கிராம மக்கள் சுமார் 50 பேர் மேம்பாலத்தில் திரண்டு வந்து பஸ்சை சிறைபிடித்தனர். உடனடியாக மோட்டார் வாகன ஆய்வாளர் நேரில் வந்து நடவடிக்கை எடுத்தால் தான் பஸ்சை விடுவிப்போம் என பொதுமக்கள் கூறினர். இதைத்தொடர்ந்து ஆத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஊருக்குள் வராத பஸ்சை இயக்கிய டிரைவர், கண்டக்டர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து இரவு 7.30 மணிக்கு பஸ் புறப்பட்டு சென்றது. இதனால் காட்டுக்கோட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்