மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும்- கே.எஸ்.அழகிரி பேட்டி

நாடு மோசமான நிலையில் உள்ளது. எளியவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கே.எஸ் அழகிரி கூறினர்.

Update: 2023-07-25 13:52 GMT

சென்னை,  

சென்னை காமராஜர் அரங்கத்தில் 'கக்கன்' திரைப்படத்தின் ஒலிநாடா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு மோசமான நிலையில் உள்ளது. எளியவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. துரியோதனன் ஆட்சியில் கூட துயில் உரிய முயற்சித்தார்கள். ஆனால் பாஞ்சாலியை முழுமையாக நிர்வாணமாக்கவில்லை. ஆனால் மோடி ஆட்சியில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆட்சி எடுத்த நடவடிக்கை என்ன? உடனடியாக கிடைத்த நீதி என்ன? உடனடியாக கிடைத்த தீர்வு என்ன? அரசாங்கம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது. இதுவரை பிரதமர் மோடி பதில் சொல்ல மறுக்கிறார். நாடாளுமன்றத்திலும் பதில் சொல்ல மறுக்கிறார். வெளியிலும் பதில் சொல்ல மறுக்கிறார்.

டெல்லியில், காமுகர்கள் செய்த வெறிச்செயல்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் இங்கு இனவெறியில் அவமானப்படுத்த வேண்டும் என்று பெண்மையை இழிவு படுத்தி கேவலப்படுத்தி உள்ளார்கள். இதற்கு அரசிடம் இருந்து மிகக் கடுமையான பதில் வேண்டாமா? இதைத்தான் இன்று இந்தியா எதிர்பார்க்கிறது. உலகமும் எதிர்பார்க்கிறது பிரதமர் மோடி இதற்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்