பிரதமர் மோடியின் பொய் மூட்டை பேச்சுகள் தமிழ்நாட்டில் பலிக்காது - முத்தரசன்

தமிழ்நாடு அரசின் மீது பிரதமர் மோடி பழி சுமத்துவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-05 06:35 GMT

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு திரும்ப திரும்ப வந்து செல்வது வியப்பளிக்கிறது. அரசு நிகழ்ச்சிக்காக வந்தாலும் பா.ஜ.க.வின் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் மோடி, மறந்து போயும் கூட உண்மை பேசக் கூடாது என்று உறுதி காட்டி வருவதை அவரது தேர்தல் பரப்புரை பேச்சுகள் வெளிப்படுத்தி வருகின்றன. பிரதமர் மோடியின் பொய் மூட்டை பேச்சுகள் தமிழ்நாட்டில் பலிக்காது.

கடந்த 2023 டிசம்பர் முதல் வாரத்திலும், மூன்றாவது வாரத்திலும் தலைநகர் சென்னை உள்பட பத்து மாவட்டங்கள் கடுமையான இயற்கை பேரிடரை சந்தித்தது. இங்கு மக்கள் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து, சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களும், விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பயிர்களுக்கும் பெரும் சேதாரம் ஏற்பட்டது.

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் வான்வழி ஆய்வு செய்து திரும்பினார். நிவாரணப் பணிகள் நிறைவடையும் நேரத்தில் மத்திய அரசின் நிதி மந்திரி தென் மாவட்டங்களில் கள நிலவரத்தை நேரில் கண்டறிந்தார். மத்திய அரசின் உயர்மட்ட ஆய்வுக் குழுக்களும் பார்வையிட்டன. அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட ஆய்வுக் குழு மாநில அரசின் இயற்கை பேரிடர் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் பாராட்டி, உதவி கரம் தருவதாக உறுதி அளித்துச் சென்றது.

மாநில முதல்-அமைச்சர், இயற்கை பேரிடர் பாதிப்புகளை விரிவாக சேகரித்து, அதன் விவரங்களை பட்டியலிட்டு, தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவித்து ரூ.37 ஆயிரத்து 917 கோடி நிவாரண உதவி நிதி வழங்குமாறு பிரதமரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். கடிதங்கள் எழுதியும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து, கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், மத்திய அரசு வழக்கமாக வழங்கும் பேரிடர் கால உதவி தவிர கூடுதலாக ஒரு ரூபாயும் வழங்காமல் வஞ்சித்து விட்டதை பிரதமர் மூடி மறைத்து, மத்திய அரசின் உதவி இல்லாமல் பேரிடர் நிவாரணப் பணிகளை போர்க்கால வேகத்துடன் மேற்கொண்டதுடன் மக்கள் மறுவாழ்வுக்கு ரொக்கப் பண உதவியும் செய்த தமிழ்நாடு அரசின் மீது பிரதமர் மோடி அபாண்டமாக பழி சுமத்துவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

பிரதமர் மோடியின் பொய் மூட்டைகள் மொத்த வியாபாரம் தமிழ்நாட்டு மக்களிடம் விலை போகாது என்பதை அவர் புரிந்து கொள்ளும் வகையில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்