நாளை மறுநாள் குமரி வருகிறார் பிரதமர் மோடி: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, தேர்தல் பிரசாரத்திலும் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.

Update: 2024-03-12 18:54 GMT

கோப்புப்படம் 

நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பல்வேறு மாநிலங்களில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் தென்மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

அதனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி சமீபகாலமாக தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

அவர் தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை ஆகிய பகுதிகளில் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.

இந்தநிலையில் அவர் மீண்டும் தமிழகம் வர உள்ளார். அதாவது நாளை மறுநாள் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதற்காக ஹெலிகாப்டரில் அவர் கன்னியாகுமரிக்கு வர இருக்கிறார். அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள மைதானத்தில் ஹெலிகாப்டர் வந்து இறங்க உள்ளது.

பிரதமர் மோடியின் கேரள பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர் நாளை மறுநாள் பாலக்காடு மற்றும் ஆலத்தூர் தொகுதிகளிலும், 17-ந் தேதி பத்தினம் திட்டாவிலும் பிரசாரம் செய்வார் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நாளை மறுநாள் பத்தினம்திட்டாவில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், 19-ந்தேதி பாலக்காட்டில் நடக்கும் ரோடு-ஷோவிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு பிரசாரம் செய்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்