வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் என்று பொதுப்பணித்துறை அதிகாரி தொிவித்தாா்.;
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளாறு படி நில உபகோட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 211 ஏரிகள், கோமுகிஆறு, மணிஆறு, முக்தாஆறு, 74 தடுப்பணைகள், கோமுகி அணை, மணிமுக்தா அணை ஆகியவை உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை(நீர்வளம்) உதவி செயற்பொறியாளர் மோகன் கூறுகையில், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால் 31 கிலோ மீட்டர் தூரம் வரை தூர்வாரி பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அணையின் ஷட்டர், மதகு பராமரிப்பு, சரி செய்தல், கரை பாதுகாத்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அகர கோட்டாலத்தில் உள்ள மணிமுக்தா அணையின் ஷெட்டர், மதகு மற்றும் கரை பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதான வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால் தூர் வாரும் மற்றும் கரை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள், சாக்குகள் மற்றும் சவுக்கு மரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மழையின் போது ஏரிக்கரைகள் உடைப்பு மற்றும் சேதம் ஏற்படுவதை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்றார்.