சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
சிதம்பரேஸ்வரர்
கள்ளக்குறிச்சியில் உள்ள சிவகாமசுந்தரி சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை நந்தி பெருமானுக்கு பன்னீர், திருமஞ்சனம், அரிசி மாவு, பால் தயிர், இளநீர், கரும்புச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், விபூதி, சந்தனம், சொர்ணம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உற்சவர் சிதம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்பிரகாரம் உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் தென்கீரனூர் அண்ணாமலையார், சோமண்டார்குடி ஆலத்தூர் சிவன் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
ஏகாம்பரேஸ்வரர்
சங்கராபுரம் முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதே போல் சங்கராபுரம் சன்னதி தெரு மணிமங்களநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
ஞானதேசிக ஈஸ்வரர்
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் யோகநாயகி உடனுறை ஆத்மநாதசுவாமி, உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.