மாமல்லபுரத்தில் புயல் கரையை கடக்கும் போது சேதமடைந்த மின்கம்பங்கள் - அதிகாரிகள் ஆய்வு
புயல் கரையை கடக்கும் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து மாமல்லபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
செங்கல்பட்டு,
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் நள்ளிரவில் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசியது. அப்போது தேவனேரி மீனவ பகுதிகளில் ராட்சத அலைகள் தாக்கியதால், அங்குள்ள சிமெண்ட் சாலைகள் சேதமடைந்தன. கடல் அலையில் 10-க்கும் மேற்பட்ட வலைகள் அட்த்துச் செல்லப்பட்டன.
அதே போல் கடற்கரையில் உள்ள ஒரு மின் கம்பம் முறிந்து கீழே விழுந்ததால், மின் கம்பிகள் அறுந்து அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலின் நிழற்குடைகள் உடைந்து விழுந்தன.
இந்நிலையில் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை வழங்குவதற்காக சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் மாமல்லபுரம் தேவனேரி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.