கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள்

பிரம்மகுண்டம் பகுதி வயல்களில் கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

Update: 2023-06-11 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருப்பதால் அதில் உள்ள மின் கம்பிகளும் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் காற்று வீசும்போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து அதில் இருந்து பறந்து விழும் தீப்பொறிகள் வயல்வெளிகளில் விழுவதால் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் எரிந்து சாம்பலாகி விடுகிறது. மேலும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் விவசாய நிலங்களில் உழவு செய்யவும், நெல் அறுவடை செய்யவும் முடியாமல் கடும் சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் உயிருக்கு அஞ்சி கரும்பு பயிர்களை அறுவடை செய்வதற்கு தொழிலாளர்கள் வருவதும் கிடையாது.

இது குறித்து கரும்பு அறுவடை செய்யும் தொழிலாளர்கள் கூறுகையில் வயல் வெளி பகுதியில் கைக்கு எட்டும் தூரத்துக்கு மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் மின் அதிர்ச்சி ஏற்படுவதாகவும், இதனால் மின்கம்பிகள் தாழ்வாக செல்லும் வயல்களில் வேலைக்கு செல்வது கிடையாது என்றும் தெரிவித்தனர். பிரம்மகுண்டம் பகுதியில் பெரும்பாலான வயல்களில் கரும்பு பயிர் நடவு செய்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. அறுவடை செய்ய முடியாத நிலை இருப்பதாலும், மின்கம்பிகள் உராய்ந்து தீப்பொறிகள் பறந்து விழுந்து பயிர்கள் எரிந்து விடுவதாலும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். இதுகுறித்து வடபொன்பரப்பி இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரம்மகுண்டம் பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைப்பது மட்டுமின்றி, சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்களையும் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்