மண்பானை தயாரிக்கும் பணிகள் மும்முரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-01-02 17:56 GMT

மண்பானை தயாரிக்கும் பணி

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கிராமப்புறங்களில் இன்றளவும் பொங்கல் பண்டிகைக்கு மண்பானையிலேயே பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது. இந்த பாரம்பரிய முறை தற்காலத்தில் சில்வர், பித்தளை போன்ற நவீன பொருட்களால் பாதிக்கப்பட்டு நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் மண்பானையை மறந்து நாகரிகம் என்ற பெயரில் இயற்கைக்கு எதிராக மாறிவிட்டனர். ஆனாலும் மண்பாண்ட பொருட்களை தயாரிக்கும் தொழிலாளர்கள், மக்கள் தங்கள் செய்த மண்பாண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த தொழிலை செய்து வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வேப்பம்பட்டி கிராமத்தில் அதிக அளவில் தொழிலாளர்கள் மண்பானை மற்றும் அதற்கு உரிய மூடி, குழம்பு சட்டிகள் செய்து வருகின்றனர். மண்பானை தயாரிக்க மூலப்பொருட்களான மண் நேர்த்தியாக தேர்வு செய்யப்படுகிறது. கறம்பக்குடி, குன்றாண்டார் கோவில் ஒன்றியம் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து மண்பானை தயாரிக்க மண் எடுத்து வரப்படுகிறது.

சவாலான தொழில்

மண்பானை தயாரிக்கும் தொழில் மிகவும் சவாலான தொழிலாகும். தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மண்ணை எடுத்து வந்து அதை பக்குவமாக காய வைத்து பிறகு பிசைந்து ஊறவைத்து பின்னர் தண்ணீர் ஊற்றி குழைத்து அந்த களிமண்ணை திருவை என்று கூறக்கூடிய மண்பானை செய்யும் எந்திரத்தில் வைத்து சுற்ற செய்து அதிலிருந்து மண் பானை வடிவமைக்கப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் நிழலில் காய வைத்து சூளையில் அடுக்கி 12 மணி நேரம் மூட்டம் போடப்பட்டு சுட்ட மண்பானை பிரித்து எடுக்கப்படுகிறது.

பிறகு வண்ணம் தீட்டி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இலவசமாக வழங்க வேண்டும்

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி சங்கர் கூறியதாவது:-

இந்த மண்பாண்ட தொழிலை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் நாங்கள் பாரம்பரியமாக செய்து வருகிறோம். இந்த தொழிலை தற்போது ஒரு சில குடும்பங்கள் மட்டுமே செய்து வருகிறோம். போதிய வருமானம் இல்லாததால் மற்றவர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள். ஆகவே அரசு மண்பாண்ட பொருட்களில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படுகின்ற நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும். மேலும் நவீனத்தை கைவிட்டு மண்பாண்ட பொருட்களை வாங்குவதற்கு அரசு ஊக்குவிக்க வேண்டும்.

பொங்கல் பரிசில் கரும்பு வழங்குவது போல் வரும் காலங்களில் மண்பானையையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் நாங்கள் வங்கியை அணுகி கேட்டால் அந்தக் கடன் உதவி எங்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நிலையை போக்கி மத்திய-மாநில அரசுகள் மண்பாண்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை எங்களுக்கு ஏற்படுத்தி இந்த மண்பாண்ட தொழில் அழியாத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்