சேதமடைந்த கட்டிடத்தில் செயல்படும் தபால் நிலையம்
சேதமடைந்த கட்டிடத்தில் செயல்படும் தபால் நிலையம்
திருப்பூர்
திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் அருகே தபால் நிலையம் ஒன்று உள்ளது. இந்த தபால் நிலையத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட தபால் சேமிப்பு கணக்குகள் உள்ளன. தினமும் 200 வாடிக்கையாளர்கள் இந்த தபால் நிலையத்திற்கு வந்து சென்றுகொண்டிருக்கின்றனர். தபால் ஊழியர்கள் 7 பேரும், தபால்காரர்கள் 26 பேரும் இங்கு பணியாற்றி வருகிறார்கள். திருப்பூரில் அதிகமான தபால்காரர்கள் பணியாற்றும் தபால் நிலையமான இந்த தபால் நிலையம் இருந்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க தபால் நிலைய கட்டிடத்தின் நிலையோ பார்ப்பதற்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
இந்த தபால் நிலையத்தின் பல்வேறு இடங்களில் சுவர்கள் சேதமடைந்து பழைய கட்டிடம் போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக தபால் நிலைய கட்டிடத்தின் சுற்றுச்சுவர் அதிகளவில் பாதிப்படைந்து இப்பவோ, எப்பவோ கீழே விழும் நிலையில் இருக்கிறது. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் எங்கே சுற்றுச்சுவர் இடிந்து, தங்கள் மேல் விழுந்து காயம் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் அடைகின்றனர். அதேபோல் தபால் நிலையத்தில் வளாகத்திற்குள் நிற்கக்கூட வாடிக்கையாளர்கள் பயப்படுகின்றனர். தபால் நிலையத்தின் பின்புறம் காட்டன் மார்க்கெட் மற்றும் அருகாமையில் உள்ள கடைகளில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் தபால் நிலையத்திற்குள் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. தபால் நிலையத்தின் முன்பு உள்ள இடமும் அசுத்தமாக கிடக்கிறது. இரவில் மதுபிரியர்கள் மதுஅருந்திவிட்டு மதுப்பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். எனவே இந்த தபால் நிலையத்தின் கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.