தர்மபுரி கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்வீடுகளில் பெண்கள் கொலு வைத்து வழிபாடு

தர்மபுரி பகுதியில் அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது. வீடுகளில் கொலு வைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Update: 2023-10-15 19:00 GMT

தர்மபுரி பகுதியில் அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது. வீடுகளில் கொலு வைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நவராத்திரி விழா

இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் தொடங்கியது. விழாவையொட்டி அந்தந்த கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் சாமி உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதன்படி தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி, ஆனந்த நடராஜர், சென்னகேசவ பெருமாள் மற்றும் துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கட்டளைதாரர்கள் பிரசாதம் வழங்கினர். கோவில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட களிமண் சிலைகள், பொம்மைகள் அடங்கிய நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இந்த நவராத்திரி கொலுவுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

மகாலிங்கேஸ்வரர் கோவில்

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனமர் மல்லிகார்ஜூன சாமி கோவில் மற்றும் வரமகாலட்சுமி உடனமர் பரவாசுதேவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. சாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் உபகார பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தர்மபுரி நெசவாளர் நகர் ஓம்சக்தி மாரியம்மன் கோவில், வேல்முருகன் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகளுடன் தொடங்கியது. இதேபோல் அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனமர் மருதவாணேஸ்வரர் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், எஸ்.வி.ரோடு சாலை விநாயகர் கோவில், சுப்பிரமணிய சாமி கோவில், ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரர் கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அஷ்டவராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் வீடுகளில் பெண்கள் கொலு பொம்மைகள் வைத்து வழிபட தொடங்கி உள்ளனர். சிறிய முதல் பெரிய அளவிலான கொலு பொம்மைகள் வழிபாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்