அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில் அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கி தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-09 21:54 GMT


ஈரோடு மாவட்டத்தில் அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கி தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி பெறும் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வினியோகத்தை நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில் 868 ரேஷன் கடைகள் முழு நேரமாகவும், 319 ரேஷன் கடைகள் பகுதி நேரமாகவும் என மொத்தம் 1,187 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அரிசி ரேஷன் கார்டு தாரர்களான 7 லட்சத்து 47 ஆயிரத்து 538 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.79 கோடியே 8 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் வண்டிக்காரன் தோட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கணேசமூர்த்தி எம்.பி., மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், ஈரோடு சிந்தாமணி மேலாண்மை இயக்குனர் ரேணுகா, ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான், பொது வினியோக திட்ட துணை பதிவாளர்கள் கந்தசாமி, கவுன்சிலர்கள் சக்திவேல், குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருந்ததால் கூட்ட நெரிசல் இன்றி பொதுமக்கள் வரிசையாக காத்திருந்து வாங்கி சென்றனர்.

மேலும், ரேஷன் கடைகளில் பல லட்சம் ரூபாய் இருப்பு வைத்து வழங்கப்படுவதால், ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க முடியாதவர்கள் அரசு அறிவிப்பின்படி பண்டிகைக்கு பின்னர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்