ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு: ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் வைப்பு

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்ட அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2022-07-06 18:04 GMT

வாக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 7-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவி, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வெட்டுக்காடு, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேலப்பட்டு, அரிமளம் ஊராட்சி ஒன்றியம் நெடுங்குடி, குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தென்னங்குடி, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தொண்டைமான் ஊரணி ஆகிய 5 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், அரிமளம் ஒன்றியம் செங்கீரை ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதில் 20 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டுப்பெட்டிகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மொத்தம் 119 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. இதில் 54 ஆயிரத்து 777 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவி, தென்னங்குடி, தொண்டைமான் ஊரணி ஆகிய 2 ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தக்கூடிய ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனை சரிபார்க்கும் பணி நேற்று நடைபெற்றது.

போலீஸ் பாதுகாப்பு

இதேபோல மற்ற ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பயன்படுத்தக்கூடிய ஓட்டுப்பெட்டிகளும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வேட்பாளர்களின் சின்னம் பொருத்திய வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு வந்துவிட்டன. அவை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த அறைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்