'அரசியல் என்பது படப்பிடிப்பு போன்றது அல்ல; மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பது' - வானதி சீனிவாசன்

விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை மனப்பூர்வமாக வரவேற்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Update: 2023-06-22 16:39 GMT

கோவை,

நடிகர் விஜய் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.

அண்மையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவில், மாணவர்கள் சிலர் மேடையிலேயே நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், 'விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவர் தான் முடிவெடுப்பார்' என்று தெரிவித்தார்.

அதே சமயம் இது தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-

"விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஏனென்றால் இளைஞர்கள் அதிகமாக அரசியலுக்கு வரும் போது ஜனநாயகத்திற்கு புதிய வேகம் கிடைக்கும். எனவே விஜய் மட்டுமல்ல, வேறு எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும், நாங்கள் அவர்களை வரவேற்கிறோம்.

இதற்கு முன்பு கூட ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தார். அடுத்த முதல்-அமைச்சர் நான் தான் என்றார். ஆனால் அவர் என்ன செய்தார்? சிலர் படப்பிடிப்புக்கு வருவது போல் அரசியலை நினைக்கிறார்கள். படப்பிடிப்புக்கு வருவது போன்றது அல்ல அரசியல், வாழ்க்கையையே மக்களுக்காக அர்ப்பணிப்பது தான் அரசியல்" என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்