பா.ஜ.க.வினர் மாலை அணிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு-மறியல்
தஞ்சையில், அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தஞ்சாவூர்;
தஞ்சையில், அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அம்பேத்கர் நினைவு தினம்
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மறியல் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று காலை பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பா.ஜ.க.வினர் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக வந்தனர்.
எதிர்ப்பு
இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, தமிழ் தேசிய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் கார்த்திகேயன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அம்பேத்கர் சிலையை சுற்றிலும் நின்று கொண்டு பா.ஜ.க.வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.மேலும் அவர்கள், இந்த அம்பேத்கர் சிலையானது தனியாருக்கு சொந்தமானது எனவும், பா.ஜ.க.வுக்கு நாங்கள் எதிரி அல்ல. ஆனால் அவர்களது கொள்கையை நாங்கள் எதிர்ப்பதால் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக்கூடாது என வலியுறுத்தினர்.
பா.ஜ.க.வினர் சாலை மறியல்
ஆனால் அம்பேத்கர் எல்லோருக்கும் பொதுவான தலைவர் எனவும், சாலையோரம் பொதுவான இடத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் செல்லமாட்டோம் எனக் கூறிய பா.ஜ.க.வினர் திடீரென சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அமைப்பினர் சாலையில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதை அறிந்த நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவேல், இன்ஸ்பெக்டர்கள் சந்திரா, பார்த்திபன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை-பதற்றம்
அப்போது பா.ஜ.க.வை எதிர்த்த அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அம்பேத்கர் சிலை அருகே சென்றனர். ஆனால் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். தொடர்ந்து இரு தரப்பினரிடமும் போலீசார் மாறி, மாறி பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் பா.ஜ.க.வினரை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க விடமாட்டோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் மறியலை கைவிடமாட்டோம் என பா.ஜ.க.வினரும் உறுதிபட தெரிவித்தனர்.இப்படி இருதரப்பினரும் தங்களது முடிவில் விடாபிடியாக இருந்ததால் பதற்றம் நிலவியது. இந்தநிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீரென எழுந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக ஊர்வலமாக வந்தனர்.இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடுப்பையும் மீறி பா.ஜ.க.வினர் சிலர் மாலையுடன் அம்பேத்கர் சிலையை நோக்கி சென்றனர்.
கைது
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிரடிபடை போலீசார் கயிற்றை கொண்டு மறித்தனர். அதையும் மீறி பா.ஜ.க.வினர் வந்தபோது அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.உடனே பா.ஜ.க.வினரை போலீசார் பிடித்து கைது செய்வதாக அழைத்து சென்றனர். பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.க.வினர் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியிரையும் கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் கோஷங்கள் எழுப்பினர்.
போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
அந்த நேரத்தில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் அம்பேத்கர் சிலையை சுற்றி நின்ற அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அம்பேத்கர் சிலையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.மேலும் அந்த பகுதியில் நின்ற அனைவரையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் கொண்டு வரப்பட்டு, அம்பேத்கர் சிலையை சுற்றிலும் வைக்கப்பட்டது. அம்பேத்கர் சிலைக்கு யாரும் மாலை அணிவிக்கக்கூடாது என போலீசார் தடை விதித்தனர்.
கேமரா மூலம் கண்காணிப்பு
அதுமட்டுமின்றி அம்பேத்கர் சிலைக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வை சேர்ந்த 70 பேரையும், அவர்களை தடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 15 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இந்த போராட்டத்தினால் நேற்று நண்பகல் 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நாஞ்சிக்கோட்டை சாலையில் மறியல் கிராமத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.