புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் 5 வீடுகளில் திருடிய போலீஸ்காரர் மகன் கைது - பரபரப்பு தகவல்கள்

சென்னை புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் 5 வீடுகளில் ஒரே நேரத்தில் 25 பவுன் நகைகள் திருடிய போலீஸ்காரர் மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-23 05:33 GMT

சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை போலீசார் வசிக்கும் போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதை புது குடியிருப்பு என்று அழைப்பார்கள். ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் இந்த குடியிருப்புகள் எழில் மிகு தோற்றத்துடன் காணப்படும்.

நேற்று காலையில் இந்த போலீஸ் குடியிருப்பில் அதிர்ச்சி சம்பவம் நடந்து விட்டது. பொதுவாக இந்த வீடுகள் பகலில் பூட்டப்படாது. கதவு சாத்தப்பட்டு இருக்கும். இதை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் ஆட்கள் வெளியில் சென்றிருந்த 5 வீடுகளின் கதவை திறந்து உள்ளே புகுந்து, 25 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று விட்டார்.

சிங்கத்தின் குகைக்குள்ளே சிறு நரி புகுந்து விளையாடி விட்டதே என்று போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியாக பேசப்பட்டது. திருட்டு கொடுத்தவர்களின் பெயர் விவரம் கூட வெளியில் சொல்லக்கூடாது, என்று கண்டிப்பான உத்தரவு.

இந்த சம்பவம் பற்றி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர்தான், இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கிறார் என்றும், அவர் பிடிபடுவார் என்றும் தெரிவித்தார்கள்.

இதற்கிடையில் நேற்று இரவு அந்த குடியிருப்பில் வசிக்கும் போலீஸ்காரர் ஒருவரின் மகன்தான், இந்த கைவரிசை காட்டிஇருப்பது, வெளிச்சத்துக்கு வந்தது. அவரது பெயர் நண்டு என்ற நந்தகோபால் (வயது 22). பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ள அவர், வேலை எதுவும் இல்லாமல் இருந்தார். செலவுக்கு தேவைப்பட்ட பணத்துக்காக அவர் திருட்டில் ஈடுபட்டாராம். எழும்பூர் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து, திருடிய நகைகளையும் மீட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்