சென்னை தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் போலீஸ்காரர் கைது
சென்னை தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் கோவை போலீஸ்காரர், 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொழில் அதிபர் கடத்தல்
சென்னை தியாகராய நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவரும், மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ் (42) என்பவரும் ரியல் எஸ்டேட் மற்றும் சவுடு மணல் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் சரவணன் தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக தொழில் அதிபர் ஆரோக்கியராஜிடம் ரூ.1 கோடி கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்தாமல் அவர் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆரோக்கியராஜ் ஆத்திரம் அடைந்தார்.
இந்தநிலையில் ஆரோக்கியராஜ் 5 பேர் கும்பலுடன் சரவணன் வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் சென்றார். திடீரென்று கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரை காரில் கடத்தினார். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 2 சொகுசு கார்கள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் பொருட்களை எடுத்து சென்றனர்.
உடனடி மீட்பு
சரவணனை காரில் கடத்தியபோது அவரது சகோதரர் முத்துகுமரன் (51) தடுக்க முயன்றார். ஆனால் அவரை கீழே தள்ளிவிட்டு கடத்தல் கும்பல் மின்னல் வேகத்தில் தப்பியது. கடத்தல் சம்பவம் குறித்து முத்துகுமரன் மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உடனடியாக விசாரணையில் இறங்கினர். சரவணனை கடத்தி சென்ற கார் மற்றும் அவரது வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்ட கார்களின் பதிவு எண்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து சோதனை சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டது. இந்த நிலையில் துரைப்பாக்கம் பகுதியில் போலீசாரின் அதிரடி வாகன சோதனையில் 2 சொகுசு கார்களும் பிடிபட்டன. ஆனால் காரில் இருந்தவர்கள் தப்பி சென்றனர்.
இதற்கிடையே கிழக்கு கடற்கரை சாலையில் சரவணனை கடத்தி சென்ற காரை போலீசார் மடக்கினர். காரில் இருந்து சரவணனை பத்திரமாக மீட்டனர். அவரை கடத்தி சென்ற ஆரோக்கியராஜ், கார் டிரைவர் அரவிந்த்குரு (23), திருப்பூர் மாவட்டம் முத்தனம்பாளையம்பகுதியை சேர்ந்த அப்ரோஸ் (23) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ்காரர் கைது
இந்த நிலையில் சொகுசு காரை விட்டு தப்பி சென்ற 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவை காந்திபுரம் குடியிருப்பை சேர்ந்த சிறை போலீஸ்காரர் நாகேந்திரன் (31), மதுரை மீனாம்பாள்புரம் பண்டிட் நேருஜி தெருவை சேர்ந்த அஜய் (24), மதுரை கே.புதூர் சூர்யாநகர் 3-வது தெருவை சேர்ந்த விஜயபாண்டி (25) என்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவர்களில் அப்ரோஸ், அஜய் ஆகிய 2 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடத்தல் கும்பல் சரவணன் வீட்டில் இருந்து எடுத்து சென்ற 2 சொகுசு கார்கள், விலை உயர்ந்த வாட்ச், 9 செல்போன்களை போலீசார் மீட்டனர். மேலும் இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள், 7 செல்போன், 'லேப்டாப்', கத்தி, 2 துப்பாக்கி மற்றும் இரும்பு ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் 2 துப்பாக்கிகளும் பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது.
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் கடத்தல் சம்பவம் நடைபெற்ற 2 மணி நேரத்தில் தொழில் அதிபர் சரவணனை மீட்டு கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த போலீசாரை கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டி உள்ளார்.