மாமல்லபுரத்தில் பாறை மீது ஏறி செல்பி எடுத்தவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மாமல்லபுரத்தில் கடற்கரை மற்றும் புராதன சின்னங்களில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

Update: 2022-10-17 07:18 GMT

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. வார விடுமுறைகளில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். அவர்கள் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகளையும், குடைவரை சிற்பங்களையும் சுற்றி பார்த்து ரசித்தனர். பலர் வெண்ணை உருண்டை பாறை புராதன சின்னம் முன்பு குடும்பம், குடும்பமாக நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கடல் சீற்றம்

மாமல்லபுரம் கடற்கரையிலும் கொளுத்தும் வெயிலிலும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் நேற்று திரண்டு வந்து பொழுதை கழித்தனர். கடல் சீற்றம் அதிகமிருந்த போதிலும் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. குறிப்பாக மாமல்லபுரம் கடற்கரை கோவிலை கடல் அரிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக தொல்லியல் துறை ராட்சத பாறாங்கற்களை கடற்கரை ஓரங்களில் கொட்டி உள்ளது.

இந்நிலையில் சுற்றுலா வந்த வாலிபர்கள் சிலர் 'கரணம் தப்பினால் மரணம்' என்று கூட யோசிக்காமல் ஆபத்தை உணராத அவர்கள் அலட்சிய போக்குடன் பாறைகள் மீது ஏறி நின்று செல்பி, புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.

போலீசார் எச்சரித்தனர்

அப்போது மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீசார் அந்த வாலிபர்களை அழைத்து, அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.

கடற்கரையில் ரோந்து வந்த போலீசார் பாறைகள் உள்ள பகுதிகளில் குளித்து கொண்டிருந்த பயணிகளை அழைத்து, ஆபத்தான கடல் பகுதி இங்கு யாரும் குளிக்க வேண்டாம் என்று என்று அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியதையும் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நூற்றுக்கணக்கான கார், வேன், ஷேர் ஆட்டோ, பஸ் போன்ற சுற்றுலா வாகனங்களின் வருகையும் காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்