சித்த மருத்துவர் கடத்தல்; கேரள வாலிபரை பிடிக்க தனிப்படை

சித்த மருத்துவர் கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட கேரள வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்தார்.

Update: 2022-05-29 15:18 GMT

சித்த மருத்துவர் கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட கேரள வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்தார்.

சித்த மருத்துவர் கடத்தல்

திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் தவயோகநாதன் (வயது 65). சித்த மருத்துவர். இவருக்கு கடந்த 26-ந்தேதி மர்ம நபர்கள் செல்போனில் தொடர்புகொண்டு தங்கள் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி திண்டுக்கல்லுக்கு வரவழைத்தனர். பின்னர் அவரை காரில் கடத்திச்சென்று திண்டுக்கல்லை அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டினர்.

இதற்கிடையே திண்டுக்கல் சென்ற தவயோகநாதன் கடத்தப்பட்டது குறித்து அறிந்த அவருடைய மகன் வெங்கடேஸ்வரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் புகார் கொடுத்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் தலைமையில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது கடத்தல் கும்பல் வெங்கடேஸ்வரனிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக செம்பட்டிக்கு வருவது தெரியவந்தது.

5 பேர் கைது

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்கூல் பகுதியை சேர்ந்த சசிதரன் (37) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் அய்யம்பாளையத்தை சேர்ந்த ஜெயராம் (46), கே.சி.பட்டியை சேர்ந்த மணிகண்டன் (40), நாகப்பட்டினம் செல்லூரை சேர்ந்த நாகராஜன் (27), திருப்பூர் செவந்திபாளையத்தை சேர்ந்த கோபி (38) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையே சித்த மருத்துவரை பத்திரமாக மீட்டதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் 5 பேரை கைது செய்த போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் தலைமையிலான இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், இந்த வழக்கில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மாதவன் என்ற விமல் (35) என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்