போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்
சிவகாசியில் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசியில் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீசார் திணறல்
தொழில் நகரமான சிவகாசியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். சமீப காலமாக வெளிமாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் அவர்களை பற்றிய எந்த தகவலும் இங்குள்ள நிறுவனங்கள் கேட்டு வாங்கி பதிவு செய்து கொள்வதில்லை என கூறப்படுகிறது.
வெளிமாநில நபர்கள் சிலர் கொள்ளை, கொலை போன்ற சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர். இந்தநிலையில் சிவகாசி பகுதியில் தொடர்ந்து குற்றச்செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
4 வீடுகளில் கொள்ளை
வெளி மாவட்ட, மாநில நபர்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியாமல் போகிறது. இதை தடுக்க சிவகாசியில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் கேட்டு வாங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தேவைப்படும் பட்சத்தில் அதனை போலீசாரிடம் வழங்க வேண்டும் என்ற நிலையை கொண்டு வர வேண்டும். அப்போது தான் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள நபர்களை எளிதில் பிடிக்க முடியும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி அருகே ஒரே பகுதியில் 4 வீடுகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
புறக்காவல் நிலையம்
இது போன்ற சம்பவங்களை தவிர்க்க போலீஸ் அதிகாரிகள் தங்களது ரோந்து பணியினை அதிகப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் செயல்பட்டு வந்தது போல் புறக்காவல் நிலையங்களை செயல்படுத்த வேண்டும்.
பூட்டி கிடக்கும் சோதனை சாவடிகளை திறந்து போதிய போலீசாரை பணியில் அமர்த்தி வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.