உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 8 கடைகளில் பணம் கொள்ளை மர்மநபா்களுக்கு போலீஸ் வலைவீச்சு

உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 8 கடைகளில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2023-03-31 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் எலவனாசூர்கோட்டை-திருக்கோவிலூர் சாலையில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் பிரகாஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கல்லா பெட்டி உடைக்கப்பட்டு கிடந்ததுடன், அதில் இருந்த ரூ.2 ஆயிரத்தை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் 7 கடைகள்

இதேபோல் அருகில் உள்ள 4 டீக்கடைகள், எலக்ட்ரானிக் கடை உள்ளிட்ட 7 கடைகளின் ஷட்டர் பூட்டை உடைத்த மர்மநபர்கள் கடைகளில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிளையும் ஆய்வு செய்து, கடைகளில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்து 8 கடைகளின் ஷட்டர் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்