வேலூர், குடியாத்தத்தில் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.72½ லட்சம் கொள்ளை அடித்த மர்மகும்பலை பிடிக்க வேலூர், குடியாதத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

Update: 2023-02-12 16:21 GMT

ரூ.72½ லட்சம் கொள்ளை

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெரு, தேனிமலை, கலசப்பாக்கம், போளூர் பகுதியில் உள்ள 4 ஏ.டி.எம். எந்திரங்களை நேற்று முன்தினம் இரவு உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.72½ லட்சத்தை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாளில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏ.டி.எம். எந்திரங்களில் கொள்ளையடித்த மர்மகும்பல் காரில் வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் அதிரடியாக சோதனையிடவும், மாவட்ட எல்லைகள், சோதனைச்சாவடிகள், முக்கிய பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடவும் உத்தரவிட்டார்.

தங்கும் விடுதிகளில் சோதனை

அதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காந்திரோடு, பாபுராவ்தெரு, ஆற்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள அறைகளில் தங்கியுள்ளவர்களின் பெயர், முகவரி மற்றும் அவர்கள் தங்கியிருப்பதற்கான காரணங்களை விடுதி மேலாளாரிடம் கேட்டறிந்தனர். அதன்பின்னர் ஒவ்வொரு அறையாக போலீசார் சென்று முக அடையாளம் காணும் கருவி (எப்.ஆர்.எஸ்.) மூலம் அவர்களை சோதனை செய்தனர்.

இதேபோன்று பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பாகாயம், அரியூர், ஸ்ரீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை செய்தனர். வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே, காமராஜர் சிலை அருகே, சத்துவாச்சாரி காந்திநகர் உள்பட பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழக-ஆந்திர மாநில, மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த கார், வேன், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குடியாத்தம்

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் நேற்று காலை முதலே குடியாத்தம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை செய்தனர். குடியாத்தம் அடுத்த சைனகுண்டா சோதனை சாவடியில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடியாத்தம் அடுத்த பரதராமி சோதனை சாவடியில் கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியாத்தம் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்கள், நகைக்கடைகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ள பகுதியில் ரோந்து செல்ல போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்