வேப்பனப்பள்ளி அருகே ரூ.25 கோடி மோசடி புகார்: ஏலச்சீட்டு நடத்தியவர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை-முக்கிய ஆவணங்கள் சிக்கின
வேப்பனப்பள்ளி அருகே ரூ.25 கோடி மோசடி புகாரில் சரண் அடைந்தவர் வீட்டில் நேற்று கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
வேப்பனப்பள்ளி:
ஏலச்சீட்டு நடத்தி மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முனிரத்தினம் என்பவர்கள் மாத ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, பாகலூர், பேரிகை, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீட்டு போட்டு பணம் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முனிரத்தினம் இருவரும் ரூ.25 கோடி அளவில் சீட்டு பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து சீட்டு கட்டி பணம் இழந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகார்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணமுர்த்தி மற்றும் முனிரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.
வீட்டில் சோதனை
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து கடந்த 10 நாட்களாக தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் போலீசார் வி.மாதேப்பள்ளி கிராமத்தில் நடந்த கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையில் ஏலச்சீட்டு நடத்திய முக்கிய ஆவணங்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் பணம் என்னும் எந்திரம் ஏ.டி.எம். எந்திரங்கள், மடிக்கணினி ஆகியவற்றை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே போலீசார் சோதனை நடத்தும் தகவல் அறிந்து சீட்டு கட்டி பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதேப்பள்ளியில் கிருஷ்ணமூர்த்தி வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் மாதேப்பள்ளி கூட்டுரோடு சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த வேப்பனப்பள்ளி போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.