மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதைக்கு போலீஸ் பாதுகாப்பு...!

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-29 10:59 GMT

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையைக் கண்டுகளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மரப்பாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் தான், மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகே செல்ல ஏதுவாக இதுபோன்ற மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், மணற்பரப்பில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது. இந்த நடைபாதையில் சிரமம் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம்.

இந்தநிலையில், மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்ட மரப்பாதையை பொதுமக்களே அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் நோக்கமே சிதைகிறது, இந்த நிலை நீடித்தால் மரப்பாதை விரைவில் சேதமடையும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில், சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மரப்பாதையில் நடந்து சென்றால் போலீசார் அறிவுரை கூறி இது மாற்றுத்திறனாளிகளுக்கானது. பொது பாதையை பயன்படுத்துங்கள் என திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்