வேலூர்: டாக்டர் வீடுகளில் கைவரிசை காட்டிய சகோதரர்கள் கைது
வேலூர் அருகே இரு டாக்டர் வீடுகளில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் வேலப்பாடி சேர்வை முனுசாமி நகர், சகுந்தலாம்மாள் தெருவை சேர்ந்தவர் மணிகண்ணன் (வயது 52). இவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
டாக்டர் வீடுகளில் கொள்ளை
கடந்த மாதம் 24-ந் தேதி அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் வீட்டில் புகுந்தனர். வீட்டில் இருந்து 22.5 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதே போல சத்துவாச்சாரி பகுதியில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த மற்றொரு டாக்டரான முகமது என்பவர் வீட்டிலும் கொள்ளை அடிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
இந்த இரு சம்பவங்கள் அடிப்படையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பகுதி, இளங்கோ நகரை சேர்ந்த மொய்தீன் என்ற சதக்கதுல்லா (வயது 33), ஷாஜகான் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் அண்ணன்- தம்பிகள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டிய கார்
அவர்களிடமிருந்து ஒரு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த காரில் அவர்கள் டாக்டர்கள் பயன்படுத்தும் குறியீடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதன் மூலம் அவர்கள் தங்களை டாக்டர்கள் போன்று அடையாளம் காட்டிக்கொண்டு வலம் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
டாக்டர் மணிகண்ணன் வீட்டில் நடந்த கொலை வழக்கில் அந்த பகுதியில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் தான் போலீசார் துப்பு துலக்கினர். அதில் பதிவாகி இருந்த கார் கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் என விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் தான் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம், 2.5 பவுன் நகைகள், ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள், 2,500 அமெரிக்கன் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.