பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டி வருகிற 5-ந்தேதி நடக்கிறது.

Update: 2023-06-22 19:05 GMT

இதுகுறித்து கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கவிதை, கட்டுரை போட்டி

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றாலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் கவிதை, கட்டுரை. பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத் தொகை, பாராட்டு சான்றிழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான போட்டிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி (புதன்கிழமை) ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், மதியம் 1.30 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கும் தனித்தனியே கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளது.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பிக்கலாம்

ஒரு பள்ளி, கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் வீதம் மூன்று போட்டிகளுக்கு 6 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும். போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்பு படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் பரிந்துரையுடனும், கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வர் பரிந்துரையுடனும் வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்தல் வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்