பா.ம.க.-வி.சி.க.வினர் அடுத்தடுத்து சாலை மறியல்

குள்ளஞ்சாவடி அருகே தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று கொடியேற்ற இருந்த நிலையில் பா.ம.க.-வி.சி.க.வினர் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பதற்றமான சூழல் நிலவியதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-11-28 18:45 GMT

குறிஞ்சிப்பாடி:

குள்ளஞ்சாவடி அருகே சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி் சார்பில் 60 அடி உயரத்தில் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு கொடியேற்றப்படவில்லை.

இருப்பினும், அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்தது. மேலும் இதுதொடர்பாக கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

சாலை மறியல்

இந்த நிலையில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி அளவில் அந்த கொடி கம்பத்தில் கொடி ஏற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மாலை செய்து வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பா.ம.க.வினர், அங்கு திரண்டு வந்து கட்சி கொடியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடலூர்-விருத்தாசலம் சாலையில் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

பதற்றம்; போலீஸ் குவிப்பு

தொடர்ந்து அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவா்கள் கட்சி கொடியேற்ற அனுமதி வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் குள்ளஞ்சாவடி போலீசார் அங்கு விரைந்து சென்று இரு கட்சியினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்