பா.ம.க.வினர் சாலைமறியல் போராட்டம் போலீசாருடன் தள்ளு-முள்ளு

நெய்வேலியில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் பா.ம.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-29 08:17 GMT

கும்மிடிப்பூண்டி, 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பா.ம.க.வினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் வி.எம்.பிரகாஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி பஜார் பஸ் நிலையத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது போலீசாருக்கும் கட்சியினருக்கும் திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் திடீரென பா.ம.க.வினர் கும்மிடிப்பூண்டி பஜார் சாலையில் ஓடிவந்து அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்து கோஷம் போட்ட நிலையில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க. வினர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சி நிர்வாகிகள் நேற்று மாலை மணவாளநகர் அருகே திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்ற பாலயோகி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் திருவள்ளூரில்-பூந்தமல்லி, திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சுமார் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

மேலும், திருத்தணி-சென்னை பைபாஸ் சாலை ரவுண்டானா பகுதியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜோதி குமார் தலைமையில் பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அவ்வழியாக வந்த கதர் துறை அமைச்சர் காந்தியின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதேபோல் அரக்கோணம் சாலையில் நகர செயலாளர் சேகர், திருவாலங்காடு பகுதியில் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் பா.ம.க. வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கேசவன் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் கேசவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தாஸ் மற்றும் திரளான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே கண்டன கோஷங்களை எழுப்பியவாறு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடம்பத்தூர் பேரம்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்