சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சென்னை-மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் உள்பட நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-12 05:59 GMT

சென்னை,

சென்னை-மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் உள்பட நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு அதிகமான ரெயில்வே திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார்.

இதன்படி, தெற்கு ரெயில்வேயில் சென்னை-மைசூரு இடையே கூடுதலாக ஒரு புதிய வந்தே பாரத் ரெயில், லக்னோ-டேராடூன், கலபுா்கி-பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, டெல்லி (நிஜாமுதீன்)-கஜுரஹோ, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், நியூ ஜல்பைகுரி-பாட்னா, லக்னோ-பாட்னா, ஆமதாபாத்-மும்பை, பூரி-விசாகப்பட்டினம் என மொத்தம் 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற சென்னை-மைசூரு இடையேயான 2-வது வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் கவர்னர் ஆா்.என்.ரவி, மத்திய இணை-மந்திரி எல்.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனர்.

வாரந்தோறும் புதன்கிழமை தவிர தினசரி காலை 6 மணிக்கு மைசூருவிலிருந்து புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில் (எண்:20663), பிற்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும். மீண்டும் மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்:20664), காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ண ராஜபுரம், மாண்டியா வழியாக இரவு 11.20-க்கு மைசூரு சென்றடையும்.

திருவனந்தபுரம்-காசா்கோடு வந்தே பாரத் ரெயில் சேவையை மங்களூரு வரை நீட்டிக்கும் நிகழ்வையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதுதவிர, கொல்லம்-திருப்பதி விரைவு ரெயில் சேவையைத் தொடங்கி வைத்த அவா், பேசின்பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிட் லைனை நாட்டுக்கு அா்ப்பணித்தார். மேலும், சிங்கப்பெருமாள் கோவில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வள்ளியூா் ஆகிய 6 ஊா்களில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையத்தையும் நாட்டுக்கு அா்ப்பணித்தார்.

திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ஆகிய ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மலிவுவிலை மருந்தகங்களையும், 168 ரெயில் நிலையங்களில் 'ஒரு நிலையம் ஒரு பொருள்' (விற்பனை) அரங்குகளையும் திறந்து வைத்தார். இதுதவிர, பல்வேறு திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்