ஆதம்பாக்கத்தில் கார் மோதி பிளஸ்-2 மாணவன் பலி

ஆதம்பாக்கத்தில் கார் மோதி பிளஸ்-2 மாணவன் பலியானார்.;

Update:2023-04-08 10:23 IST

சென்னை வேளச்சேரியில் இருந்து உள்வட்ட சாலை வழியாக ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலை நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக சென்றது. நங்கநல்லூர் 24-வது தெரு சந்திப்பில் வந்தபோது எதிரே வந்த மொபட் மீது கார் மோதியது. தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார், அந்த வழியாக வந்த ஆட்டோ மீதும் மோதியது.

இதில் மொபட்டில் வந்த நங்கநல்லூர் அவ்வையார்தெருவைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடைய மகன் ராஜ்கவுதம் (வயது 17) பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பலியான ராஜ்கவுதம், நங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

மேலும் இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரான பாலவாக்கம் பல்கலை நகரை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (38) என்பவர் காலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த டிரைவரான திருச்சி உறையூரை சேர்ந்த நரேந்திரகாந்த் (28) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்