மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் பலியானார்.
விராலிமலை தாலுகா பூதகுடி இ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜெரால்டு முருகேசன் மகன் மாத்யூ ஹரீஷ் (வயது 17). இவர் விராலிமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி தனது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன் சந்தோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கத்தலூர் சென்றுவிட்டு தங்களது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சந்தோஷ் ஓட்டி சென்றார். வீரம்பட்டி அருகே சென்றபோது தெருநாய் ஒன்று குறுக்கே வந்தது. இதில் நிலைத்தடுமாறிய மாத்யூ ஹரீஷ் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாத்யூ ஹரீஷ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.