மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சி வளரும் அதிசய செடி

மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சி வளரும் அதிசய செடியின் மூலம் உவர் நிலத்தையும் விளை நிலமாக மாற்ற முடியும்.

Update: 2022-12-07 19:26 GMT

மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சி வளரும் அதிசய செடியின் மூலம் உவர் நிலத்தையும் விளை நிலமாக மாற்ற முடியும்.

ஓர் பூடு

பொதுவாக உவர் நிலம், உப்பு நீர் போன்றவை பயிர் வளர்ச்சியை தடை செய்யக்கூடிய காரணிகளாகும். ஆனால் உப்பு படிந்த கடற்கரை மண்ணிலும் ஒருவகை செடி பசுமையாக செழித்து வளர்ந்திருப்பதைக் காண முடியும். இது எப்படி சாத்தியம் என்ற ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கினார்கள். அந்த அற்புத செடியின் பெயர் ஓர் பூடு ஆகும். இதன் தாவரவியல் பெயர் செசுவியம் போர்டுலகாஸ்ட்ரம் இதனை வங்கராசிக் கீரை, கடல் வழுக்கைக் கீரை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். இது மண்ணிலுள்ள சோடியம் உப்பை உறிஞ்சி வளர்கிறது.

அந்தவகையில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு இது மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சி வளர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அதிகப்படியான ரசாயன உரங்கள், பல்வேறு விதமான ரசாயனக் கழிவுகள் மற்றும் அதிக ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுவதால் உப்புத்தன்மையாகும் பாசன நீர் போன்றவற்றால் நிலம் உப்புத் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது.

விளைநிலமாக மாற்றலாம்

இத்தகைய உவர் நிலங்களில் எந்த தாவரமும் வளராது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த மண்ணில் ஓர்பூடு தாவரத்தை விதைத்து வளர்க்கும் போது உவர் மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சி நன்னிலமாக மாற்றுகிறது. இதன் மூலம் உப்பு படிந்து மலடாகிப் போன நிலத்தையும் விளைநிலமாக மாற்றலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தாவரத்தை கால்நடைத் தீவனமாகவும், புற்று நோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

இந்த ஓர்பூடு தாவரத்தை வங்கராசிக் கீரை என்ற பெயரில் கடற்கரையோர மக்கள் உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். இறால் மீனுடன் கலந்து சமைப்பதற்கு சிறந்த கீரையாக இது பார்க்கப்படுகிறது. இந்த தாவரத்தைப் பயன்படுத்தி உவர் நிலங்களை மீட்டெடுத்து விளை நிலங்களாக மாற்றும் வகையில் அரசு திட்டம் வகுக்க வேண்டும். பெருகி வரும் மக்கள் தொகையால் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இன்றைய சூழலில் உவர் நிலங்களை விளைநிலமாக்கும் அற்புத கீரையை பயன்படுத்தி அதிசயங்கள் நிகழ்த்த விவசாயிகளும் தயாராக வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்