திட்டக்குழு உறுப்பினர்கள் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும்

திட்டக்குழு உறுப்பினர்கள் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும்

Update: 2023-06-28 18:45 GMT

திட்டக்குழு உறுப்பினர்கள் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும் என்று திட்டக்குழு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்ட திட்டக்குழு தேர்தல்

திருவாரூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 24-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலர் சித்ரா வழங்கினார்.

இதையடுத்து திட்டக்குழு தலைவராக மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்றுகொண்டனர்.

திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம்

மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, செல்வராஜ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பூண்டிகலைவாணன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தலையாமங்கலம் பாலு பேசுகையில்,

மாவட்ட திட்டக்குழுவில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ள அனைவரும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும். விவசாயம் சார்ந்த மாவட்டம் மட்டுமின்றி முதல்-அமைச்சரின் மாவட்டமாகவும் இருப்பதால் அரசின் அனைத்து துறை பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டு இந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு பணியாற்ற வேண்டும் என்றார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

கூட்டத்தில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலை நடத்தி முடித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்திரா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சவுந்தர்யா, மாவட்ட ஊராட்சி செயலர் சந்தானம் மற்றும் அலுவலர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்