ஊத்தங்கரை அருகே வங்கியில் கொள்ளையடிக்க திட்டம்
ஊத்தங்கரை அருகே வங்கியில் கொள்ளையடிக்க திட்டம்; பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை பாம்பாறு அணை கிருஷ்ணன் கோவில் அருகில் ஊத்தங்கரை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த கொள்ளையடிக்க வைத்திருந்த வெல்டிங் எந்திரம், பிளேடுகள், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நேபாளம் நாட்டை சேர்ந்த ரவி பண்டாரி (வயது 37), ஜெகாத் (49), தேவ்ராஜ் (38) பூனம் (40) ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்தது. இதில் பூனம் பெண் ஆவார். மேலும் அமல்பாப்பா என்பவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.