வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க தடுப்புகள் வைப்பு

கோத்தகிரியில் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தியதால் விபத்து அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக அங்கு வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-12-18 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரியில் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தியதால் விபத்து அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அங்கு வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது.

விபத்து அபாயம்

கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதி, 5 முக்கிய சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ளது. அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இங்கிருந்து கிரீன்வேலி பகுதிக்கு செல்லும் சாலையில் ஆதிவாசி நல சங்க மருத்துவமனை, பள்ளிகள், வணிக வளாகம், குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலை வழியாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அந்த நடைபாதையை ஆக்கிரமித்து தொடர்ந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தன. நடைபாதை மீது வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்ததால், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இதனால் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. நடைபாதையின் குறுக்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.

நடவடிக்கை

இதனால் சாலையில் பாதுகாப்பின்றி நடந்து செல்ல வேண்டிய சிரமமான சூழ்நிலை நிலவி வந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இதை தொடர்ந்து நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் வைத்தும், கயிறு கட்டியும் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல வழிவகை செய்தனர். இதன் மூலம் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசாருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்