நூலகங்களை பயன்படுத்துகின்ற இடங்கள்சிறந்த சமுதாயமாக இருக்கும்-கலெக்டர் பேச்சு

நூலகங்களை பயன்படுத்துகிற இடங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.

Update: 2023-05-02 18:03 GMT

நூலகங்களை பயன்படுத்துகிற இடங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.

புத்தக கண்காட்சி

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சியுடன் கூடிய இலக்கிய திருவிழாவை நடத்தியது. இதில் ரூ.ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் புத்தகங்களை வாங்கிய 600 நபர்களுக்கு புத்தகச் சோலை, புத்தக காவலர், புத்தக காதலர் மற்றும் புத்தக நேயர் ஆகிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விருதுகளை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு சமுதாயம் நாகரிகமான சமுதாயமாக மாற வேண்டும் என்றால் கல்வி மிக மிக முக்கியம். பாரதிதாசனார் சொல்வது போன்று கல்வி இல்லாதவர் களர்நிலம் போன்றவர். கல்வி இல்லாத வீடு இருண்ட வீடு போன்றது.

குழந்தைகளுக்கு சிறந்த பரிசினை கொடுக்க வேண்டும் என்றால் சிறந்த புத்தகத்தை வாங்கி கொடுங்கள் என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்லி இருக்கிறார்.

ஒரு நாடு கல்வியில் சிறக்க வேண்டும் என்றால் நூலகம் மற்றும் எழுத்துக்கள் மிக முக்கியமானவை.

சிறந்த சமுதாயம்

அந்த வகையில் நூலகங்கள் இருக்கின்ற இடங்கள் அல்லது நூலகங்களை பயன்படுத்துகின்ற இடங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கும். புத்தகங்களை வாங்குவது மட்டுமல்ல புத்தகங்களை படிகக் வேண்டும் மற்றவர்களையும் படிப்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

சங்க காலம் தொட்டு இக்காலம் வரை பண ஓலையில் ஆரம்பித்து தற்போது அச்சிட்டு வருகின்ற வரை ஒரு கற்றறிந்த சமூகமாக தமிழ் சமூகம் இருக்கின்றது. வரும் புத்தகத் திருவிழாவில் வருகின்ற அனைவருமே இந்த விருதினை பெறுவதற்கு தகுதியானவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். நூலகத்தின் உறுப்பினர்களாக தங்களது பிள்ளைகளை இணைக்க வேண்டும். ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்றால் நூலகத்தில் உள்ள பாதி புத்தகங்களை படித்திருக்க வேண்டும். அப்பொழுது தான் ஒரு புத்தகத்தை எப்படி ஆரம்பிப்பது முடிப்பது என்று அறிந்து கொள்ள முடியும். ஆகவே புத்தகங்கள் நமக்கான பரிசளிப்புகள், புத்தகங்களை படித்து அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், ஜோலார்பேட்டை நகராட்சியின் சார்பில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகத்தை கலெக்டர் அலுவலக வளாக நூலத்திற்கு அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, கலெக்ரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் பாலசுப்பரமணியன், நகராட்சி ஆணையர் பழனி, பதிப்பாளர் இளம்பரிதி, வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளக்கல்வித்துறை ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்