மரத்தில் தூக்குப்போட்டு உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை

நெல்லையில் தனியார் கல்லூரி வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-13 19:55 GMT

பேட்டை:

நெல்லையில் தனியார் கல்லூரி வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடற்கல்வி ஆசிரியர்

நெல்லை பேட்டை செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கொம்பன். இவரது மனைவி மாசானம் அம்மாள். இவர்களின் மகன் சுடலைமுத்து (வயது 29).

இவர் பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, தற்போது பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

தற்கொலை

நேற்று முன்தினம் இரவில் தான் படித்த கல்லூரியில் உள்ள மரத்தில் சுடலைமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலையில் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கும், பேட்டை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காரணம் என்ன?

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுடலைமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுடலைமுத்துவின் தாய் மாசானம் அம்மாளுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தனக்கு திருமணம் தள்ளி செல்வதாக நினைத்து மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதன் காரணமாக விரக்தி அடைந்த சுடலைமுத்து நேற்று முன்தினம் தான் படித்த கல்லூரிக்கு சென்று மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கல்லூரிக்கு விடுமுறை

எனினும் சுடலைமுத்துவின் தற்கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது காதல் விவகாரம் உள்ளிட்ட வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியதால் கல்லூரிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்