கேரளாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: குமரி எல்லையில் பெட்ரோல், டீசலுக்காக குவிந்த கேரள வாகனங்கள்..!

குமரியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103.87-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.95.50-க்கும் விற்கப்படுகிறது.

Update: 2023-04-02 03:25 GMT

குமரி,

கேரளாவில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

கேரளாவில் ஒரு லிட்டர் ரூ. 107-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் ரூ.109 ஆகவும், அதே போல் ரூ.96-க்கு விற்பனையான டீசல் ரூ.98 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆனால் தமிழக - கேரளா எல்லையான குமரியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103.87-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.95.50-க்கும் விற்கப்படுகிறது.

இந்த நிலையில், இதை அறிந்த தமிழக-கேரள எல்லை பகுதியான பாறசாலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குமரியின் எல்லைப் பகுதியில் உள்ள தமிழக பெட்ரோல் பங்குகளுக்கு வந்து தங்கள் இரு சக்கர வாகனம், கார் மற்றும் லாரிகளுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர். கேரளா எல்லை பகுதியில் உள்ள கேரள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்-டீசல் நிரப்ப யாரும் வராததால் அவை வெறிச்சோடி காணப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளதால் கேரளாவில் ஆட்டோ டிரைவர் மற்றும் கார், லாரி ஓட்டுனர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளின் கஷ்டத்தை கருத்தில் கொண்டு விலை உயர்வை கேரள அரசு வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்