கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; எப்.ஐ.ஆர். விவரம்

சென்னையில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது

Update: 2023-10-26 07:38 GMT

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென நேற்று பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடந்த விசாரணையில், அவர் தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர கவர்னர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார்.

வினோத்திடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கிண்டி காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் கவர்னரின் செயலாளர் கிரிலோஷ் குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர காவல் துறை இணை ஆணையா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி, துணை ஆணையா் ஆா்.பொன் காா்த்திக்குமாா் ஆகியோா் தமிழக கவர்னர் ஆா்.என்.ரவியை சந்தித்து நேற்று விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரும் ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய எப்.ஐ.ஆர். பதிவில், பெட்ரோல் குண்டு அதிக சத்தத்துடன் வெடித்தது என்றும் அரசு அலுவலகம் மீது குண்டு வீசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. அவரை பிடிப்பதற்காக போலீசார் விரட்டியபோது, மற்றொரு வெடிகுண்டை வீசியுள்ளார் என்றும் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்